Skip to main content

சென்னை மெட்ரோ ரயில் பணிகள்; ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Chennai Metro Rail Works; Traffic change for a week

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று (11.02.2024) முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கெனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும். இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).

அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (எற்கெனவே உள்ளபடி). வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, ஜீ.என். செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம். மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு  தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.