Chennai Met Dept Information on Strengthened as a low pressure zone 

Advertisment

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (15.10.2024) வலுவடைந்திருந்தது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு நாளை (16.10.2024) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (14.10.2024) இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. முன்னதாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார். அதோடு சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், அதி கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையை கடக்க கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.