Skip to main content

புத்தாண்டு: சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் சென்னையில் இரவு 01.00 மணி வரை மட்டுமே புத்தாண்டை கொண்டாட காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

chennai marina beach newyear celebration 2020 police instruction


இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மெரினா, சாந்தோம் உள்ளிட்ட கடற்கரையில் மணலில் செல்லும் வாகனம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக  கூறுகின்றன. அதைத் தொடர்ந்து கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க குதிரைப்படைகள் கடற்கரையோரங்களில் பயன்படுத்தப்படும், மெரினா, சாந்தோம், காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். சென்னை மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பொதுமக்கள் காவல்துறையினடருன் கைகோர்த்து 2020ம் புத்தாண்டை இனிதாக வரவேற்போம்.

chennai marina beach newyear celebration 2020 police instruction



மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அத்துடன் பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் தகவல்கள் குற்ற ஆவண காப்பகத்தில் சேகரிக்கப்படும்.


சென்னையில் இன்று (31.12.2019) இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை உட்புறச்சாலையில் இன்று (31.12.2019) இரவு 08.00 மணி முதல் அனைத்து வழிகளும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்படும். கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் இரவு 08.00 மணி வரை காமராஜர் சாலை வழியே செல்லலாம். காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை இன்று (31.12.2019) இரவு 08.00 மணி முதல் வாகனங்கள் செல்லாத்தடை. ஜனவரி 1- ஆம் தேதி அதிகாலை 04.00 மணிவரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.