Skip to main content

மெரினா லூப் சாலையில் நடைபாதை அமைப்பதற்கான விண்ணப்பம்!- பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவு!  

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை  நடைபாதை அமைப்பது தொடர்பான விண்ணப்பம் குறித்து, 6 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை  அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

chennai marina beach  loop road high court government

ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும் பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக  மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஆஜரான அதன் உறுப்பினர் செயலர், டாக்டர்.ஜெயந்தி, கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பான சென்னை மாநகராட்சியின் விண்ணப்பம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

chennai marina beach  loop road high court government

தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், மெரினாவில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காகத் தள்ளுவண்டி கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் மற்றும் கடைகள் வாடகை நிர்ணயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனக் கோரினார். 
 
மெரினாவை உலகத்தர கடற்கரையாக மாற்றுவதே தங்கள் நோக்கம் எனவும், எந்த வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை மீது 6 வார காலத்திற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். அதுபோல,  மீன் பிடி தடைக் காலத்தின்போது கொடுக்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்கக் கோரிய பிரதான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.