Skip to main content

தக்காளியின் விலை மீண்டும் உயர்வு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

chennai koyambedu market tomato price rate hike 

 

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. தற்போது தக்காளி வெளிச்சந்தைகளில் 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

 

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசு சார்பில் தக்காளியை கூடுதலாக கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25  கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் ஆக, 82 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முதல் ரக தக்காளி கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் சிறிய ரக தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலை முந்தைய நாளை விட நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் விலை 50 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்