சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோரிடமிருந்து பிரிந்திருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாகக் கூறி, விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரில் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

chennai iit student fathima incident cbi investigation request to students association high court

இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தை லத்தீப் பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கடந்த 2018- ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை, சென்னை ஐஐடியில் 5 மாணவர்கள், இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.