Skip to main content

ஐ. ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம்!  சிறப்பு விசாரணைக் குழு விசாரணை தேவை! - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்  

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

Chennai IIT Employee passes away inside campus

 

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஐ.டி.நிர்வாகத்தை கண்டித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.
 

இந்த நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, "சென்னை ஐ.ஐ.டி. உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். 

 

இந்தச் சூழ்நிலையில் சென்னை ஐஐடி கல்வி வளாகத்தில் உன்னிகிருஷ்ணன் எனும் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது. எனவேதான், பணியில் இருந்து வெளியேறுவதாக அங்கு பணிபுரிந்த உதவி பேராசிரியர் விபின் கடிதம் கொடுத்து இருக்கிறார் என்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர் ஒருவரின் மரணம் நிகழ்ந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஏற்கெனவே கடந்த 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி.யில்  நிலவும் பாரபட்சப்போக்கை சுட்டி காட்டிய நிலையில் மர்மமாக மரணித்தார். இது குறித்த சிபிஐ விசாரணையும் மர்மமாகவே உள்ளது.


நல்ல கல்வி என்பது மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சம உரிமை குறித்த புரிதலை உருவாக்குவது ஆகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனத்தில் இது போன்ற சமூகக் கேடுகளை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சமூக ரீதியான பாகுபாடுகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும்" என்று வலியிறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.