எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு விலக்களிக்க மறுத்த உயர் நீதிமன்றம்...

chennai highcourt

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ.மா.சுப்ரமணியன் நேரில் ஆஜராக வேண்டுமென்ற சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு விலக்களிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை - கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி, முறைகேடான ஆவணங்கள் மூலம்,தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையைசேர்ந்த பார்த்திபன்,வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார்,பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மா.சுப்பிரமணியன்,சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் 15- ம் தேதி இவ்வழக்கில் மா.சுப்ரமணியன், நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன்,மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டுமென வாதிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனு மீதான நகல் இதுவரை தங்களுக்கு கிடைக்க பெறவில்லை, அதற்குள்ளாகவே, தங்கள் தரப்பு வாதங்களை மனுதாரர் சமர்ப்பிப்பது ஏற்புடையதல்ல என்பதால்,இவ்வழக்கில் காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென வாதிட்டார்.

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மறுத்த நீதிபதி, அது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறும், வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு,வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

highcourt MLA
இதையும் படியுங்கள்
Subscribe