கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2009, பிப்ரவரி 19-ம் தேதி, உயர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த காவல் துறையினர் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, உயர்நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த பொது மக்கள் உட்பட அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதோடு, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அவர்களின் கார்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள்.
வழக்கறிஞர்கள், இந்த நாளை ஆண்டுதோறும் கருப்பு தினமாகக் கடைபிடித்து நீதிமன்ற பணிப் புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பேரணியாகச் சென்ற வழக்கறிஞர்கள், கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்றும், இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.