Skip to main content

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு!

Published on 31/07/2020 | Edited on 01/08/2020

 

chennai highcourt

 

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரியும், சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

கிரிக்கெட் வீரர் விராட் கோலி,  நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து, விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி, பின்னர் அதைக் கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது,  இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர்நீதி மன்றம் அதற்கு  தடை விதித்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் அதைவிட வீரியமானது என்பதால், இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு, அதற்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட இணையத்தளங்களை முடக்க வேண்டும்.

 

ஆன்லைன் சூதாட்ட இணையத்தளங்களை நிர்வகித்து வருபவர்களைக் கைதுசெய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்ட நிலையில், மனுவை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்