
ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘தர்மபுரி மாவட்டம் - சின்னமானசாவடியில் உள்ள ஒரு ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர் சிலர். இதை மீட்கக்கோரி, கடந்த ஜூன் மாதம், தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என, தர்மபுரியைச் சேர்ந்த கலையரசி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் ஓடை புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக நாளிதழ்களில் தினமும் செய்திகள் வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை? நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் ஏன் அமைக்கக்கூடாது? நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும், ஏன் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிலத்தடி நீர் சுரண்டல் அதிகளவில் நடப்பதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், உள்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை, தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்து, ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, நான்கு வார காலத்திற்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)