
தனக்குக் காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் என்றும்,தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும்,ஜெ. தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது. அத்துடன், அவர்களின் சொந்தச் செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு,நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ். ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாப்பையா, தீபா மற்றும் தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து, 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தைச் செலுத்துமாறு,காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனத்தெரிவித்தார்
தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கடிதத்துக்குப் பதில் அளிக்க இருப்பதாகத் தெரிவித்த நிலையில், தீபா தரப்பு வழக்கறிஞர், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் என்றும், தனியார் பாதுகாப்பை அமர்த்திக் கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)