
ஆவின் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, ஆறு மாதங்களுக்குள் கருத்துக் கேட்டு, நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, ஆவின் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளது போல, தங்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் துவங்க வேண்டுமென, ஆவின் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான மோகனரங்கன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாலரமேஷ், ‘அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து மாதாந்திர தவணை செலுத்தி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பயன் அடைந்து வருகின்றனர். கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை. ஆவின் நிறுவன ஊழியர்களும், அது போல் மாதாந்திர சந்தா செலுத்தினால் மட்டுமே அது சாத்தியம்.’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாத சந்தா செலுத்த, தம்மைப் போன்ற பலர் தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு உத்தரவிட்ட நீதிபதி சுரேஷ்குமார், ஆறு மாதங்களுக்குள், இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் காப்பீட்டுக்கு மாத சந்தா செலுத்தத் தயாராக இருக்கும்பட்சத்தில், அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டுமென, ஆவின் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.