
சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கரோனாவைக் குணப்படுத்துவதாக வீடியோ பதிவிட்ட புகாரில் சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவரது தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தரப்பில், கரோனா தடுப்புக்காக கபசுர குடிநீர் குடிப்பதை ஊக்குவித்தது மற்றும் அரசு குறித்து சில கருத்துகளை தெரிவித்தது தொடர்பாக, வழக்குப் பதியப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் எனவும், ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மூலிகை மூலமான நிவாரணங்களையே, கரோனாவுக்கான மருந்தாக மக்களிடம் பிரபலப்படுத்தியதாகவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், ‘சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கத் தகுதி பெற்றவர் அல்ல. அரசு மற்றும் முதல்வர் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார். மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளார். கரோனாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை, லாபம் ஈட்டும் நோக்குடன் திருத்தணிகாசலம் பயன்படுத்தி உள்ளார். 1998-ல் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாக வைத்திருக்கும் சான்றிதழ் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தணிகாசலம் ஏற்கனவே அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்றுவிட்ட நிலையில். தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)