
இந்துசமய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது எனத் தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், 1965-ஆம் ஆண்டு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதுபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடம், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு, அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்.டி.ஓ அலுவலகம் அமைக்க கொடுக்கப்பட்டது.
அறநிலையத்துறை இடங்களைக் கோவில் பயன்பாட்டிற்குத் தவிர மற்றவற்றிற்குப் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி, வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த இரு கோவில்கள் உள்ளிட்ட பல கோவில் நிலங்களின் வழக்குகளில் இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது. அறநிலையத்துறை கோவில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையைச் செலுத்த வேண்டும்.
கோவில்களின் நிலங்களைக் கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை, ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, வழக்குகளை 6 மாதத்திற்குப் பிறகு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)