
கோயம்புத்தூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி தேவராஜ் தொடர்ந்த வழக்கில், கோவை மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டரை அச்சடிதத்த அச்சகத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது. எனவே, இந்தப் போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்டோபர் 25-ஆம் தேதி, கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டித்து, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
எனவே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படாமல், நடுநிலையோடு பாரபட்சமின்றி காவல்துறை செயல்படவேண்டும் எனக் காவல்துறை டி.ஜி.பிக்கு உத்தரவிட வேண்டும். மேலும், போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)