ADVERTISEMENT

ஓமலூரில் விதி மீறி கட்டப்பட்ட தனியார் பள்ளி; விசாரணை நடத்த வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவு!

10:12 PM Sep 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், விதிகளுக்குப் புறம்பாகக் கட்டிடம் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தொளசம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் சிவகாமியம்மாள் – சுப்பிரமணியம் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில், அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் நலன் கருதி, பள்ளியை மூடி சீல் வைக்கக் கோரி, ஓமலூர் தாலுகா, தாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளி விதிகளை மீறியிருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக, நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து, சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT