chennai highcourt

அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏபடிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

அவரது மனுவில், "கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனைத்துப் பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடையச் செய்யும். மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளது. 25% மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளது.

தேர்வுகளில் பங்கேற்றால் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும்.

தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறு. அரசின் முடிவைக் கைவிடக்கோரி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி மனு அளித்தும் பலனில்லாததால், உடனடியாக அரசின் முடிவிற்குத் தடைவிதிக்க வேண்டும்;ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

Ad

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாலகுருசாமி வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள், பல்கலைகழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதே கோரிக்கையுடன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கையும் இணைத்துப் பட்டியலிட அறிவுறுத்தியுள்ளனர்.