Skip to main content

கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு! - வாக்காளரே நடத்தலாம் என உத்தரவு! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி. ஆவார். அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை, தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதிலாக, அத்தொகுதியின் வாக்காளரான முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 
 

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் பா.ஜ.க.  வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கைத் திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார். 
 

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத்   தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
 

அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழிசைக்குப் பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்தவுள்ள முத்துராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராகவும்  இருக்கிறார். ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகாரும் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்தவர். இந்தத் தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’என வாதிட்டார்.

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   ‘வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்காளர் தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும்’என வாதிட்டார்.
 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம்  அத்தொகுதியின் வாக்காளர் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால்,  இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளது. அவர்,   தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாகத் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்தலாம்.’என்று அனுமதியளித்து உத்தரவிட்டார்.

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


மேலும், ‘தேர்தல் வழக்குகள் என்பது, சம்பந்தப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான்,  அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுகிறது. அதனால், இந்தத் தேர்தல் வழக்கை விரைந்து முடித்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என நீதிபதி அறிவுறுத்தினார்.
 

கனிமொழி தரப்பில்‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால், எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற்ற தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு தேர்தல் வழக்குச் செலவை வழங்க வேண்டும்’ என முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி,‘தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். அதனால், வழக்குச் செலவுத் தொகையினை வழங்க தேவையில்லை’என உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.