chennai high court tamilnadu government

அரசு நலத்திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 2016-ல் இயற்றப்பட்ட மாற்றுதிறனாளிகள் உரிமைகள் சட்டத்தில், அரசின் திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும், அதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அரசின் நிதி உதவி தொடர்பான திட்டங்களில் 25 சதவீத கூடுதல் தொகை வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சட்டத்தை அமல்படுத்தும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அதன் மாநில பொது செயலாளர் நம்புராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இந்தச் சட்டத்தின் வழிமுறைகளை முறையாக அமல்படுத்தாததால், 2019 பிப்ரவரியில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றிற்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக அளித்த இந்த மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை, 6 வாரத்தில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.