மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும் என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் மூன்று மாத இடைவெளிக்கு பின் இன்று (16.12.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222_3.jpg)
நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தொழிற்சாலைகள் மாசு ஏற்படுத்தியதாகக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட ஆலைகளை மூட நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும் என வாதிட்டார். ஆலையில் ஏற்பட்டுள்ள மாசுவை அப்புறப்படுத்த அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், உள்நோக்கத்துடன் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sterlite4_1.jpg)
ஆலையை பராமரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரியபோது, அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், காலாவதியான அறிக்கைகளின் அடிப்படையில் அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன என்றார். மாசு ஏற்படுத்தியது தொடர்பாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களைக் கேட்டால், 1997, 2002, 2004ம் ஆண்டுகளின் அறிக்கைகளை அரசுத்தரப்பு சுட்டிக்காட்டுவதாக புகார் தெரிவித்தார்.
அரசின் இந்த வாதங்களை 2013-ம் ஆண்டுக்கு முன்பே உச்சநீதிமன்றம் பரிசீலித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பழைய வாதங்களை இன்று ஏற்க முடியுமா எனத் தெரிவித்தார். முந்தைய காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க ஒப்புதல் வழங்கலாம் என 2018 பிப்ரவரியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஆலையை இயக்க அனுமதி மறுத்துள்ளதாக வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (17.12.2019) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Follow Us