chennai high court state and union government coronavirus

கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வீடுகள் இல்லாமல் சாலைகளில் வசித்து வரும் பெரும்பாலானோர், இந்தத் தொற்றின் விளைவுகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

Advertisment

Advertisment

இவர்கள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், சாலைகளில் வசிப்பவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யத்தனிக்குழு அமைக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்ய 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய சுகாதாரத் துறையின் மூத்த மண்டல மேலாளர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதி்ல், கரோனா பரவலைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தது. நடமாடும் பரிசோதனை மையங்களை அமைப்பதற்குச் சாத்தியக்கூறுகள் இல்லை. பொருளாதார ரீதியில் தற்சார்பு பெறாத மக்களுக்குப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோல, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தினந்தோறும் அதிகளவில் மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மத்திய, மாநில அரசுகளின் விளக்கங்களைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.