குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாக 94 வழக்குகள்! -எழுத்துப்பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

chennai high court sdpi party tn government

கரோனா பரவல் தொடர்பாகக் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்முபாரக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில், கரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத் மாநாட்டைச்சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த மாநாட்டிற்குப் பின்பும் பல கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த விவகாரம் ஒரு மதரீதியாக மாற்றப்பட்டு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. மதப் பிரிவினையை ஒரு சிலர் தூண்டி விடுகின்றனர். இது தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இது குறித்து, நூற்றுக்கணக்கான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்தப் புகார் சம்மந்தமாக, இதுவரை சுமார் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், இதை எழுத்துப்பூர்வமான பதில் மனுவாகத் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 18- ஆம் தேதிக்குஒத்திவைத்தனர்.

chennai high court sdpi Party tn govt
இதையும் படியுங்கள்
Subscribe