Skip to main content

சென்னையில் சில பகுதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளனவா?- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

chennai high court police dgp tamilnadu government

 

 

கண்ணகிநகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளனவா? எனக் கேள்வி எழுப்பி, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற 50 வயது பெண்ணை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க,  சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மகள் சரண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து, தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனு மீது தாமதமாக முடிவு எடுத்ததாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

 

அதேசமயம், வேளாங்கண்ணிக்கு எதிராக கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

குண்டர் சட்டத்திற்கு எதிராக அளித்த மனு மீது தாமதமாக முடிவெடுத்ததை சுட்டிக்காட்டி, வேளாங்கண்ணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

 

அதேசமயம், கண்ணகிநகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக்கூறிய நீதிபதிகள், சென்னை நகரில் இருந்து இப்பகுதிகளில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்றப்பட்டதால்,  வாழ்வாதாரம் இழந்த இப்பகுதி மக்கள், இதுபோன்ற சமூக விரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுவதாக  தெரிவித்தனர்.

 

மேலும், இந்த பகுதிகளைச் சேர்ந்த எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுளளனர், போதைப் பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த பகுதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளனவா, இப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதேனும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனவா, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா, இப்பகுதி மக்களின் வருவாயை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக டி.ஜி.பி.,சமூக நலத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்