தமிழ்நாட்டில் உள்ள கிளப்களில் சோதனை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! 

Chennai High Court orders raids on clubs in Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டுமென்றும், கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும் ஆனால் காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், கிளப்கள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா? என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது அரசு தரப்பில், கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் சட்டவிரோத பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்பட்ட வழக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு துறை ஐஜியைஎதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவர் சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளைசோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டகாவல் நிலையங்களில் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்தக் கிளப்களின் பதிவுகளை ரத்து செய்யநடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து 12 வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

clubs highcourt
இதையும் படியுங்கள்
Subscribe