chennai high court order for tamilnadu government

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா (அல்லது) தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய,தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை, 10 நாட்களுக்குப் பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்தச் சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இரு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், ‘பிரேதப் பரிசோதனை முடிந்த, 10 நாட்களுக்குப் பின், காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சடலங்கள் புதைக்கப்படுகின்றன. சில சடலங்கள், கல்விப் பயன்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உடல்களைத் தகனம் செய்வது என்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அதனால், சடலங்கள் புதைக்கப்படுகின்றன’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.