chennai high court order obc 10% quota certificate

உயர் கல்வியில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு வாய்ப்பு வழங்கும் நிலையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே, பொருளாதார ரீதியில் பின் தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையைப் பெற, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க ஏதுவாக, பொருளாதார ரீதியான பின் தங்கியவர் என சான்றிதழ் வழங்க கோரி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பூர்வி, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். ஆனால், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, தாசில்தார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பொருளாதார ரீதியில் பின் தங்கியவருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூர்வி மனு தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மனுவில்,‘கடந்த ஆண்டு சான்றிதழ் பெற்றபோதும், தாயாரின் மரணம் காரணமாக மேற்படிப்பில் சேர முடியவில்லை. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், ஓராண்டுக்கு மருத்துவராகச் சேர்ந்தேன். தாயின் மரணத்துக்குப் பின், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த தந்தை வேலைக்குச் செல்லவில்லை. எனக்கு நடப்பாண்டில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் மட்டுமே வருமானமாக உள்ளது.’எனக்கூறி, வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஆவணங்களில் இருந்து, மனுதாரர் பொருளாதார ரீதியில் பின் தங்கியவருக்கான சான்று பெற தகுதி உள்ளதாகக் கூறி, சான்று கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, புதிதாக சான்று வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

மேலும்,‘உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது,தற்போது தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது,சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான மாணவர்கள், கல்வியில் வாய்ப்பை பெற முடியாத நிலை உள்ளது. தகுதி பெற இயலாத மாணவர்கள், இட ஒதுக்கீடு மூலம் அந்த வாய்ப்பை பெறுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு உயர் கல்வியில் வாய்ப்பு வழங்கும் நிலையில், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே, இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.’ என, தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.