Skip to main content

பாலத்தை மீண்டும் கட்ட ரூபாய் 411 கோடி செலவாகும்! -உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

CHENNAI HIGH COURT MUNICIPALITY CORPORATION

 

 

சென்னை பட்டினம்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரை இருந்த 'உடைந்த பாலத்தை' (ப்ரோக்கன் பிரிட்ஜ்) மீண்டும் கட்ட, 411 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரை பொதுமக்கள் பார்வைக்கு எப்போது திறக்கப்படும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால்,‘தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, வரும் 14- ஆம் தேதி முதல், மெரினா உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும். 

 

மேலும், மெரினா கடற்கரையில் இருந்த பழைய கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் ரூபாய் 17 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஏக்வார்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 மாதத்துக்குள் அக்கடைகள் தயாராகும்.   

 

மீன் மார்க்கெட், ரூபாய் 1 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய லூப் சாலை இடதுபுறம் நடைபாதை அமைப்பது மற்றும் மீனவர்கள் கடற்கரையிலிருந்து இடையூறின்றி மீன் மார்க்கெட்டுக்கு செல்ல நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. சாந்தோம் பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில், ஏற்கனவே இருந்த பட்டினம்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான உடைந்த பாலத்தை மீண்டும் கட்ட 411 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மட்டும் செல்லும் வகையில், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க 229 கோடி ரூபாய் செலவாகும்.’எனத் தெரிவித்தார்.  

 

அப்போது, ஏ.எல். சிஷ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான ஏலத்தில் தாங்கள் பங்கேற்ற போதும், சில நடைமுறைச் சிக்கல்களால் ஏலத்தை எடுக்க முடியாமல் போனதாகவும், தாங்கள்தான் தமிழகத்தில் முதன் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய தள்ளு வண்டிக் கடைகளின் உற்பத்தியைத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை ஏற்கனவே ஏலத்தில் எடுத்த நிறுவனத்துக்கும், தற்போது நீதிமன்றத்தில் முறையிட்ட நிறுவனத்திற்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுக்கலாமா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில்  விரைவாக கடைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால், இது தொடர்பாக நாளை (4-ஆம் தேதி) சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

 

மேலும், சாந்தோம் மற்றும் அடையாறு பகுதியை இணைக்கும் பாலத்தை மறுசீரமைப்பு செய்வதைப் பொறுத்தவரை, வாகன நெரிசல் குறைய வேண்டுமென்றால், கார்களும் பயணிக்கும் வகையிலான திட்டத்தை அமல்படுத்துவதுதான் சிறந்தது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, மீன் மார்க்கெட் அமைப்பது, கடற்கரையோரம் லூப் சாலையை ஒட்டி நடை பாதை அமைப்பது, மீனவர்களுக்கு நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பான அடுத்த கட்ட விவரங்களைத்   தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம், இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.