Skip to main content

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது வழக்கு பதியக்கோரி மனு! -லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
chennai high court



தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு பதியக்கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவுக்கு ஜூன் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அந்த மனுவில், மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.  இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்.  கொரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில்,  அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களைத் தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளை திருத்தம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.  


முதல்வர் பழனிசாமி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு மற்றும் டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக  வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்  மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் குறித்து விசாரித்ததில், முகாந்திரம் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.  புகாரை முடித்து வைத்து,  அதுகுறித்த அறிக்கை மனுதாரருக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த டெண்டர் நடைமுறைகள் நடந்து வருகிறது. டெண்டர் இன்னும் முடிக்கப்படாததால் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.  யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை.  டெண்டர் யாருக்கும் ஒதுக்காத நிலையில் முறைகேடு குற்றச்சாட்டு எப்படி எழும் என,  அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.


இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெண்டர் குறித்த தகவல்களை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்