Skip to main content

வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது தொடர்பாக 15- ஆம் தேதி முடிவெடுக்கப்படும்!-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்! 

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

CHENNAI HIGH COURT LOCKDOWN CORONAVIRUS TEMPLE


தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக 15- ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 23- ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டு மே 17- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4- ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகள், சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தனிமனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலீல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக்கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவால் நிதிநிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழக அரசு, மனதளவில் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்திருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்களே, ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று வர முடியவில்லை. முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்குச் சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும், கோயம்பேடு மார்க்கெட்டால் ஏற்பட்ட விளைவுகளையும் குறிப்பிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால் ஊரடங்கு முடிந்தபிறகு முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், தமிழக அரசு வரும் 15 அல்லது 16 தேதிகளில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை, 18- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 



 

 

சார்ந்த செய்திகள்