ADVERTISEMENT

தொழில் வழித்தடத்திற்காக வீடுகளைக் கையகப்படுத்தும்போது இயந்திரத்தனமாகச் செயல்படக்கூடாது!- அதிகாரிகளின் உத்தரவுகள் ரத்து!

09:50 AM Nov 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தொழில் வழித்தடத்திற்காக வீடுகளைக் கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்தி முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை- கன்னியாகுமரி இடையே தொழில்வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம், மோகனூர்- நாமக்கல்- சேந்தமங்கலம்- ராசிபுரம் சாலையை விரிவுபடுத்த, அக்கியாம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளை எடுக்க, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீடுகளைக் கையகப்படுத்த ஆட்சேபம் தெரிவித்து உரிமையாளர்கள் அனுப்பிய மனுக்களை நிராகரித்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்னர், 2020 ஜூலையில், நிலங்களை அரசுடமையாக்கி,தமிழக நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஆட்சேப மனுக்களை நிராகரித்ததை எதிர்த்தும், நிலங்களை அரசுடமையாக்கியதை எதிர்த்தும், அக்கியாம்பட்டியைச் சேர்ந்த லெனின்குமார் உள்ளிட்ட 9 வீட்டு உரிமையாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, வீட்டிற்கு எதிரில் உள்ள அரசு நிலத்தை, திட்டத்திற்கு பயன்படுத்தாமல், குடியிருக்கும் வீடுகளைக் கையகப்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் ‘மனுதாரர்கள் குறிப்பிடும் நிலத்தைக் கையகப்படுத்தினால், திட்டத்தின் பாதையை மாற்ற வேண்டியதாகிவிடும். மனுதாரர்கள் உள்ளிட்டோருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி, மக்கள் கருத்துல் கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின்னர்தான், அரசுடமையாக்கும் நடவடிக்கை விதிமுறைகள முறையாகப் பின்பற்றி முடிக்கப்பட்டது’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, ஆட்சேபங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அரசுக்கு அனுப்ப வேண்டும். அவரே நேரடியாக ஆட்சேபங்களை நிராகரிக்க முடியாது. அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம், இதனைப் பல வழக்குகளில் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது. முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்துவது அவசியம் என்ற போதிலும், அதற்கான விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஒரு குடிமகன், தன் ஆயுட்கால முதலீடான வீடு பறிபோகும்போது, வேறு வீட்டை உருவாக்க முடியாத நிலை உள்ளது. உரிமையாளர்களின் ஆட்சேபங்களை தீவிரமாகப் பரிசீலித்திருக்க வேண்டுமே தவிர, இயந்திரத்தனமாக நிராகரித்திருக்கக் கூடாது’ என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஆட்சேபங்களை நிராகரித்தது மற்றும் அரசுடமையாக்கியது ஆகிய இரு உத்தரவுகளையும் ரத்து செய்த நீதிபதி, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மீண்டும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென்றும், அவற்றில் தமிழக அரசு மனதைச் செலுத்தி உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமெனவும், இந்த நடைமுறைகள் அனைத்தையும் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT