/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras666_16.jpg)
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தியாகிகள் பென்ஷன் வழங்காததை எதிர்த்து, 101 வயது சுதந்திர போராட்ட வீரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், சவுலுப்பட்டியைச் சேர்ந்த 101 வயதான வடிவேலு, சுதந்திர போராட்டத்தின்போது 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துக் கொண்டவர். அப்போது, அவர் கைதாகி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி அள்ளிபுரம் சிறையில் 7 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷன் கேட்டு மத்திய அரசிடம் 1985- ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது, தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, மத்திய உள்துறை துணைச் செயலாளர், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.
பின்னர் 1996- ஆம் ஆண்டு தமிழக அரசிடம் சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2001 முதல் பென்ஷன் வாங்கி வருகிறார். இந்நிலையில், மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வடிவேலுவின் கோரிக்கையை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடிக்க வேண்டுமென 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை மத்திய அரசிற்கு அனுப்பியும், நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே உத்தரவை அவமதிப்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வடிவேலு தொடர்ந்துள்ளார்.
அதில், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா, துணைச் செயலாளர் ரீனா மிர்ரா, பொதுத்துறைச் செயலாளர் கே.சண்முகம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)