/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 2_21.jpg)
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்குகளின் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மீனவர் அமைப்பைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்றம், வரைமுறையற்று விதித்த தடையை நீட்டித்து உள்ளதாகவும், மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட உள்ளதால், இந்த வழக்குகளையும் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார்.
இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேலும் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் இரு வழக்குகளையும், இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
Follow Us