Skip to main content

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி-க்கு கரோனா!- சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

 

chennai high court chief judge admit at govt hospital coronavirus

 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சில வழக்குகளை நேரடியாகவும், பெரும்பாலான வழக்குகளை காணொளியிலும் விசாரித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு தொடர்புடையவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர் சங்கங்கள், அவர்களின் அறைகள், செய்தியாளர் அறைகள் ஆகியவற்றை திறக்க தலைமை நீதிபதி சாஹி அனுமதி அளிக்கவில்லை.

 

நீதிபதி என்ற முறையில் வழக்குகளை விசாரிப்பது மட்டும் அல்லாமல், தலைமை நீதிபதி என்ற முறையில் நிர்வாக முடிவுகள் சார்ந்த விஷயங்களிலும் பணியாற்றி வந்தார். தமிழகம் முழுவதும் நடைபெறும் கீழமை நீதிமன்ற நிகழ்வுகளில் நேரடியாக செல்ல முடியாததால், காணொளியில் கலந்துகொண்டு வந்தார்.

 

கடந்த மாத இறுதியில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்று வழக்குகளை விசாரித்தார். இந்நிலையில், தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் வியாழக்கிழமையன்று (நவம்பர் 5-ஆம் தேதி) நேரடியாகவும், காணொளி மூலமாகவும் வழக்குகளை விசாரித்தனர். இந்த அமர்வில், பா.ஜ.க. வெற்றிவேல் யாத்திரைக்கு தடைகோரிய வழக்குகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடமையாக்க பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

 

நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு, மாலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் திறப்பு விழா நிகழ்வில் தலைமை நீதிபதி சாஹி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளும் தலைமை நீதிபதி சாஹி, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், இந்த நிகழ்வில் 10 நிமிடங்கள் மட்டுமே கலந்துகொண்டு  கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

 

பின்னர், சென்ட்ரல் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று, அங்கு இரவு 07.30 மணியளவில் கரோனா பரிசோதனை மற்றும் சி.டி. ஸ்கேன் ஆகிய சோதனைகளை எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் முடிவுகள் வருவதற்காக அங்கேயே காத்திருந்தார்.

 

பின்னர் 10.00 மணியளவில் வந்த முடிவுகளில், தலைமை நீதிபதி சாஹிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் தலைமையிலான மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மூன்றாவது டவர் பிளாக் கட்டிடத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்