தவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!

தவணைத் தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், நாட்டில் பல கோடி பேர் தற்காலிகமாக வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 27- இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச் செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது.

அதேபோல், கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாதென்று நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவினால் தெரு வியாபாரிகள் தொடங்கி பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை, சுமார் 90 சதவீதத்தினர் வருமானம் இன்றி தவிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளோ, பொருள் உதவிகளோ போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய மாத வருமானம் இருந்தபொழுது வாங்கிய கடன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தவணை முறையைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தவணையை மூன்று மாதங்கள் காலதாமதமாகச் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது ஆறுதலாக இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இயல்புநிலை திரும்பாத நிலையில், அதன் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருவதால், தவணை செலுத்தும் சலுகையை மேலும் இரண்டு மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

chennai high court banks emi lockdown time

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள தவணை செலுத்தும் சலுகையைப் பயன்படுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தும் வகையில் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான மாத வருமானம் இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் கணக்குகளில் செலுத்தப்பட்டவுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த இசிஎஸ் முறைப்படி அவர்கள் கடனுக்கான தொகை பலரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

http://onelink.to/nknapp

தவணை மற்றும் வட்டி செலுத்த விலக்களிக்க காலத்தை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிடும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் பிரதான கோரிக்கை வைத்துள்ளார் அதேபோல் இசிஎஸ் தொகையை வசூலிப்பதற்கான உத்தரவுகளை (standing instructions) நிறுத்திவைக்க வேண்டும் எனவும், வங்கிகள் மற்றும் வங்கியைச் சாராத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகையை வட்டியுடன் மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செவ்வண்ணன் மோகன் தெரிவித்தார். பின்னர் உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Banks chennai high court coronavirus lockdown
இதையும் படியுங்கள்
Subscribe