/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court ok2_2.jpg)
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்விற்கு பிந்தைய செலவினங்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டது என, அண்ணா பல்கலைக்கழகம் வரும் திங்கட்கிழமை விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தாக்கத்தால் ரத்து செய்யப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும்படி, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ‘கேள்வித்தாள் தயாரிக்க ஏற்பட்ட செலவுகள், தேர்வுத்தாளுக்கான செலவு என 1500 ரூபாய் வீதம் செலுத்த, மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு நடத்தப்படாத நிலையில், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 4 லட்சம் மாணவரிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ANNA 56.jpg)
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத்,‘மார்ச் 27- ஆம் தேதிக்கு முன்பே,கல்லூரிகள் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்துவிட்டன. தேர்வு கட்டணத்தைப் பொறுத்தவரை, தேர்வுக்கு முந்தைய செலவு, தேர்வுக்கு பிந்தைய செலவு என சில வகைகள் உள்ளன. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது போன்ற செலவுகளும் உள்ளன’ என்று குறிப்பிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்வுக்கு ஆகக்கூடிய செலவினங்கள் பட்டியலில், தேர்வு நடத்திய பிறகு விடைத்தாள்களைத் திருத்துவதற்கான செலவினங்கள் உள்ளிட்ட,தேர்வுக்கு பிந்தைய செலவினங்கள் எப்படி கணக்கிடப்பட்டன என்ற அறிக்கையைதாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 23- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)