Skip to main content

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! - உயர்நீதிமன்றம் மறுப்பு! 

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

chennai high court 7.5% quota medical seats students

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

 

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து, தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இருவர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏற்கனவே சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இதுபோல இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொருளாதார ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத் தக்கதல்ல என்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரினார். 

 

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு, அந்த இடங்களில் 20 இடங்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடந்து வரும் நிலையில், பொது நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத்  திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இந்த வழக்குகளில், 15 நாட்களில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய, தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.