Advertisment

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது அரசு! – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் குற்றச்சாட்டு!

chennai high court

நீதிபதிக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசு வேடிக்கை பார்ப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். சக நீதிபதிக்கு எதிராக தொடர்ந்து புகார் கூறி வந்ததால், இவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இருந்தும் சக நீதிபதிகள் புகார் கூறியதால், அவர் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, சிறையில் அடைத்தது. பின்னர் விடுதலையானார்.

Advertisment

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக, அவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே அவர் வெளியிட்ட வீடியோக்களை நீக்கும்படி யூ -டியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அவரை காவல்துறை கைதுசெய்ய வேண்டும் என்று மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு, பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், ‘உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்ணன் விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அரசு மற்றும் காவல் துறை இந்த விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், பல வழக்கறிஞர்களும் பார்த்து வருகின்றனர். இது நீதித்துறையை மிகவும் அவமதிக்கும் செயலாகும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வருகிற திங்கட்கிழமை இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Bar Council Chennai highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe