chennai high court 50% quota tamilnadu government

Advertisment

சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாதென மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்புமில்லை என வாதிட்டார்.

தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 7- ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Advertisment

மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்து கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.