chennai high court

எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Advertisment

அந்த விசாரணையில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ஓபிஎஸ் மற்றும் அவரது எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்ய அளிக்கப்பட்ட புகார் மனு மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை, சபாநாயகர் அவர் கடமையை சரிவர செய்யாததால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாம் என வாதிட்டிருந்தார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வெற்றிவேல் அளித்த புகார் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காததால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அரசு கொறடா உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதே போல வெற்றிவேல் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், அரசு கொறடாவின் உத்தரவு அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் பொருந்தும். அரசு கொறடா உத்தரவிடாவிட்டாலும் அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Advertisment

மேலும், பெரும்பாலும் சபாநாயகர்கள் ஆளுங்கட்சி ஆட்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு நடுநிலையை கடைபிடிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆளுங்கட்சியில் இருந்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவார் என கருதமுடியாது என வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்திருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வழக்கின் வாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் 2:15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது.