சென்னை, துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் ஒரு திருமண நிகழ்வையொட்டி ஆளும்அதிமுகவினர் தங்களது தலைவர்களை வரவேற்க விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்துள்ளனர். இதில் ஒரு பேனர் சரிந்து, அப்போது அவ்வழியாக சாலையில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆளுங்கட்சியினரின் இந்த அராஜக நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Advertisment

எதிர்கட்சியினர், ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போது, தட்டி பேர்டுகள் வைப்பதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் கூட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆனால் ஆளுங்கட்சியினர் தங்களது கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பிறந்த தினம், திருமண நிகழ்வுகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது ஆளுயுர கட் அவுட், பேனர்கள் போன்றவைகள் சாலையை மறித்துக் கொண்டு விதிமுறைகளை மீறி வைப்பதற்கு மட்டும் அனுமதித்து வருகின்றனர். மேலும், பேனர்கள் சரிந்து கீழே விழுவதும், இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் தொடரும் வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே இது குறித்து உயர்நீதிமன்றம் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை காவல்துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே மேற்கண்ட உயிரிழப்பு சம்பவம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

chennai flex incident subashree marxist communist party  k balakrishnan

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர், கட்அவுட் வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பிறந்த தினம், பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை பொதுவாக நடத்துவதில்லை. அதே போல திருமண நிகழ்ச்சிகளின் போதும் விதிமுறைகளை மீறி கட்அவுட், பேனர்கள் போன்றவற்றை எப்போதும் வைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

Advertisment

ஆளும் கட்சியினரின் அராஜக, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் ஏற்பட்ட இளம்பெண் சுபஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.