Skip to main content

சென்னையில் கரும்பு விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பேரணி (படங்கள்)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

கரும்பு விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17.02.2023)  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மாநில அரசு எஸ்.ஏ.பி. விலையாக நிர்ணயம் செய்து வழங்கக் கோரியும், தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்ற கரும்பு விவசாயிகள் மீதுள்ள வங்கிக் கடனை ஆலைப் பெயரில் மாற்றக் கோரியும் இந்தப் பேரணியில் கலந்துகொண்ட  விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கரும்பு விவசாயிகளின் பேரணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.