chennai Corporation said that Armstrong  was not allowed to be buried in the party office

Advertisment

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்குசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றநிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நாளை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Advertisment

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடலை கட்சி அலுவலகத்தில் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுவரை ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவரது உடலை கட்சி அலுவலகத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் எனறு பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியை சுற்றி கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.