Skip to main content

ராயபுரம் மண்டலத்தில் 2,324 பேருக்கு கரோனா!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

chennai corporation rayapuram zones highest coronavirus cases


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நான்காவது முறையாக மே- 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 
 


நேற்று (28/05/2020) இரவு 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10,548 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்தனர். குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. 
 

chennai corporation rayapuram zones highest coronavirus cases


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,646, திரு.வி.க.நகர்  1,393, திருவொற்றியூர் 377, மாதவரம் 280, தண்டையார்பேட்டை 1,322, அம்பத்தூர் 516, தேனாம்பேட்டை 1,412, வளசரவாக்கம் 794, அண்ணாநகர் 1,089, அடையாறு 719, பெருங்குடி 217, சோழிங்கநல்லூரில் 219, ஆலந்தூர் 178, மணலி 175, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 101 பேர் என மொத்தம் 12,762 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 


இதில் 6,330 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 102 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 6,229 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.