Skip to main content

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் மக்களைக் கவர புதிய திட்டம்! - அதிகாரிகள் ஆலோசனை!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்தி , தனி தனி மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அதி நவீன மருத்துவ வசதிகளை உருவாக்க மாநகராட்சியின் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மூலம், ஏழை எளிய மக்கள் முழுமையாகப் பயன் பெறுவார்கள் என்கிறார்கள்  மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

Chennai Corporation Hospital - improvement plan

 



இது குறித்து சுகாதர அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சி பகுதியில் ஏழை-எளிய மக்கள் இலவசமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களை நடத்தி வருகிறது  மாநகராட்சி . பொது மருத்துவ சிகிச்சை, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, பல்வேறு பரிசோதனை செய்யக்கூடிய மருத்துவமனைகளும் இதில் இயங்குகின்றன.  மாநகராட்சி மருத்துவமனைகளில் நாள்தோறும் 150 முதல் 175 பேர் வரை புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றார்கள்.

மாநகராட்சி மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் இந்த மருத்துவமனைகள் இருப்பதே அந்தப் பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. மாநகராட்சி மருத்துவமனையில் மக்களுக்காக வழங்கப்படும்  மருத்துவ சேவைகள் பற்றி தெரியாமல் இருப்பதால் அதனை மேம்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. 

 



மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகளையும், தரத்தையும் மேம்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து  ஆரம்ப சுகாதார நிலையங்களை எளிதில் அடையாளம் காணவும், சிகிச்சை பெற வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இதற்காக, அனைத்து மருத்துவமனைகளுக்கும் லோகோ, முகப்பு தோற்றம், பெயர் பலகை, அதில் உள்ள வசதிகள் குறித்து மக்களுக்கு தெரியும் வகையில் அனைத்தும் அமைக்கபடுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. மேலும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் வகையில் கூடுதலாக 181 வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க திட்டமிடப்படுகிறது.

தற்போது 36 மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை வருகை தந்து சிகிச்சை அளிக்கிறார்கள். அதே சமயம்,  மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவமனைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் பின்னர்  மருத்துவ சேவை பெறும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். 

தண்டையார்பேட்டை, எஸ்.எம்.நகர், புளியந்தோப்பு காசநோய் மருத்துவமனைகள் பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன. பொதுவாக மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய இந்த மருத்துவமனைகளில் குறைந்தது 100 பேராவது சிகிச்சை பெற வேண்டும். அந்த வகையில் சேவைகள் மேம்படுத்தப்படவுள்ளன. புதிதாக திட்டமிடப்பட்டிருக்கும் 181 மருத்துவ சேவைகள் புதிய சகாப்தத்தை உருவாக்கும்" என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்