கட்டிட விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கு! - பரிசீலித்து முடிவெடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு!

chennai corporation building chennai high court order

சென்னை மாநகராட்சியில், கட்டிட விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, சென்னையைச் சேர்ந்த பழனி என்பவர்,உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொதுமக்கள் புகார் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால், பதில் வழங்குவதில்லை. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுதாரர் வாதிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பாமல், நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளதாக, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியது முறையற்றது. இதைத் தவிர்க்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், கோரிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் புதிதாக மனு அனுப்ப மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த மனுவை, ஆறு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

building chennai corporation chennai high court
இதையும் படியுங்கள்
Subscribe