கரோனா தொற்று காரணமாகப் பலியான சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாகத்தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணர், 30 ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்த மருத்துவர் ஆவார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர். அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அரசு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

Advertisment

CHENNAI CORONAVIRUS DOCTOR INCIDENT HIGH COURT

இந்தச் சம்பவம் தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்களைக் கையாள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல் விதிமுறைகளை அறிவித்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவத் தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடமையைச் செய்வதற்காகச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், குடிமக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

Advertisment

http://onelink.to/nknapp

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்தனர்.