சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இயங்கிவரும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவருக்குக் கரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்தத் தொழிற்சாலையைக் கடந்த மாதம் பார்வையிட வந்த ஒரு சீனக் குழுவினர் மூலம், அந்த அதிகாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி, வானகரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கிருந்தும் கரோனா தன் விளையாட்டை தாய விளையாட்டு மூலம் தொடர்ந்திருக்கிறது. அதிகாரி குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டதைப் பொருட்படுத்தாமல், அவர்களின் எதிர்வீட்டினர் அந்த அதிகாரியின் வீட்டிற்கு வழக்கம் போல் சென்று பொழுதுபோக்காக, தாயம் விளையாடி வந்திருக்கிறார்கள்.
இதில் எதிர்வீட்டைச் சேர்ந்த இருவருக்கும் கரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள 7 குடும்பங்கள், இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தாயக்கட்டைகள் மூலம் ஆபத்தை உருட்டி விளையாடியவர்கள், இப்போது நொந்துபோய் சிகிச்சையில் இருக்கிறார்கள்.