Advertisment

'என் சென்னை யங் சென்னை' தமிழக தலைநகரின் மனிதர்களை கொண்டாடும் திருவிழா

Chennai Commissioner Shankar Jiwal inauguarates second edition of 'En Chennai Young Chennai'

ஆண்டுதோறும் தன் வசீகரத் தோற்றத்தாலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தாலும் இளமையாகிக்கொண்டே வரும் தமிழகத்தின் தலைநகர், ஆகஸ்ட் 22 அன்று சென்னை தினத்தைக் கொண்டாட தயாராகி வருகிறது. இந்தப் பெருநகரமும் இங்குள்ள வாழ்க்கைச் சூழல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்து உழைக்கும் சென்னை இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் முயற்சியாக ‘என் சென்னை யங் சென்னை’ என்ற நிகழ்வு இவ்வாண்டு நடத்தப்பட உள்ளது. இவ்வாண்டோடு இரண்டாவது அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த ‘என் சென்னை யங் சென்னை’ கொண்டாட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

Advertisment

இதுதொடர்பாக ‘என் சென்னை யங் சென்னை’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தினம் என்றாலே அதன் பாரம்பரியம், வரலாறு பற்றிப் பேசுவதும் ‘சென்னை நடைகள்’ மேற்கொள்வதும், உரைகள் நிகழ்த்துவதும் வழக்கமான செயல்பாடுகளாக அமைவது வழக்கம். எங்களைப் பொருத்த வரையில் சென்னை என்பது அதன் பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே அல்ல. இளம் சென்னையின் உணர்வானது சமூகத்தின் நலனுக்காக தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இதயங்களால்தானே உருவாக்கப்பட வேண்டும்! ஆம்... 2021-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘என் சென்னை யங் சென்னை’ கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் இதுதான். சென்னையின் நினைவுச் சின்னங்களையும், சென்னையின் எழிலையும் கொண்டாடுவது அவசியம்தான். அதைவிடவும் சென்னை மனிதர்களைக் கொண்டாடவே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். இந்தப் பின்னணியில்தான் சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் நீங்களும் நாங்களும் இணைந்து சென்னைக்கு சிறப்பு செய்யும் திருவிழாவாக ‘என் சென்னை யங் சென்னை’ உருவெடுத்திருக்கிறது.

Advertisment

கடந்த ஆண்டு... வந்தாரை வாழவைக்கும் சென்னையின் பெருமையைக் கூறும் சென்னை கீதத்தை அறிமுகப்படுத்தினோம். அதோடு, ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த சென்னை இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளைப் போற்றும் விதமாக விருதுகளை வழங்கினோம். சென்னையின் உதவிக்கரமாக நீளும் இந்த இளைஞர்களுக்கு மரியாதை செய்யும் விருதுகள் சென்னைக்காக - சென்னையால் - சென்னைக்கு என்கிற கோணத்தில் அளிக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் உரிமைகளுக்காக போராடுவது, சுற்றுச்சூழல் காப்பது, இயற்கைச் சீற்றங்கள், தொற்றுநோய் போன்ற எதிர்பாரா சூழல்களின்போது சவால்களை எதிர்கொண்டு, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுவதன் மூலம், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, சென்னையை மீட்டெடுத்தவர்களை இந்த விருதுகள் மூலம் அடையாளப்படுத்தும் நல்வாய்ப்பு எங்களுக்கு வாய்த்தது.

இந்த ஆண்டு ஜூன் 25-ம் அன்று தொடங்கும் ‘என் சென்னை யங் சென்னை’ விழாவை, 50 நாள்களுக்குத் தொடரவிருக்கிறோம். இன்று முதல் ஒவ்வொரு நாளும் சென்னையை நாம் இணைந்து கொண்டாடுவோம்... வாருங்கள்!

சென்னையின் மனித மதிப்பீடுகளை (Human Values) உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு குடியிருப்புகளிலும் ‘என் சென்னை யங் சென்னை’ இடம் பிடிக்கும். ஒரு மாபெரும் நிகழ்வாக இன்டோர் ஸ்டேடியம் மாரத்தான் ஓட்டம் நடைபெறவிருக்கிறது. பெருமைமிக்கதொரு விருது விழாவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டைப் போலவே சமூகப் பணிக்கான விருதுகளோடு, இந்த ஆண்டு இன்னும் இரு பிரிவுகளும் இடம்பெறுகின்றன. வணிகத் துறை சாதனையாளர்கள் மற்றும் பொழுதுபோக்கின் புதிய முகங்களும் இந்த ஆண்டு கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் இந்த ஆண்டின் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதன்மையாகத் திகழ்கிறது. எவ்வித அச்ச உணர்வும் இன்றி நாம் மகிழ்ச்சியாகவும் பத்திரமாகவும் வாழ்வதற்கு காவல் துறையின் சீரிய பணியே காரணம் என்பதை நாம் தொடர்ந்து உணர்ந்து வருகிறோம். சென்னையை பாதுகாக்கும் காவல் துறை ஆணையர் இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது. சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்களுக்கு ‘என் சென்னை யங் சென்னை’ குழு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe