சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஜூலை 18) மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,சென்னையில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்காக சென்னை மாநகராட்சியில் இதுவரை தோராயமாக ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு முன்னர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 விகிதமாக இருந்தது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தன் மூலம் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 விகிதமாக மாறியுள்ளது.
அதாவது 4 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,500 எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 13 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை 18 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர். இதன் மூலம் 60 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 80 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினமும் 40 ஆயிரம் நபர்கள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கையால், கரோனா தொற்று இரட்டிப்பாக கிட்டத்தட்ட 47 நாட்கள் ஆகிறது. உதாரணமாக 50 என்ற எண்ணிக்கை 100 ஆவதற்கு 47 நாட்கள் எடுத்து கொள்கிறது.
“சென்னையில்கரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. மக்கள் அனைவரும்மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம். இவ்வாறு தெரிவித்தார்.